அரசியலில் அதிகபட்ச நேர்மையானவர் ...
தமிழகத்தில் 12 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் திரு.கக்கன் ! இந்திய அரசியல் சாசன அவையின் உறுப்பினர். இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்தின் உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழக சட்டமன்ற உறுப்பினர். காமராஜர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் 1957 முதல் 1967 வரை 10 ஆண்டுகள் பொதுப் பணித்துறை, காவல்துறை, சிறைத்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட 12 முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார் ! இப்படி பல பதவிகளை வகித்தாலும், எளிமையாகவே வாழ்ந்து மறைந்த தமிழகத் தலைவர். இப்படியொருவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் நம்புவார்களா என்பதே சிரமம்தான். மதுரை மேலூர் அருகே தும்பைப் பட்டி கிராமத்தில் உள்ளூர் பூசாரிக் குடும்பத்தில் பிறந்தவர் கக்கன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். எஸ்.எஸ்.எல்.சிக்குப் பிறகு படிப்பைத் தொடரமுடிய வில்லை. ஆனால் மதுரை சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவருமான திரு.அ. வைத்தியநாத ஐயரின் அறிமுகம் கக்கனுக்குக் கிடைத்தது. 1934ல் மதுரைக்கு வந்த மகாத்மா காந்தியைச் சந்தித்த க...