காக்கா முட்டை

‪#‎காக்கா_முட்டை‬
இத்திரைப்படத்தை நேற்று இரவு பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
நாம் ஏறி மிதித்துக்கொண்டிருக்கிற சென்னையின் பூர்வகுடி மக்களைப் பற்றிய படம்.
சென்னையில் நாம் கடந்து செல்லும் முகங்கள், வீடுகள், கடக்கின்ற பாலங்களின் அடியில் நகரும் வீடுகள் என்று நமக்கு அன்றாடம் அறிமுகமான சமூகத்தின் பின்னணியில் சிறப்பாக கதை சொல்லப்பட்டிருக்கிறது..
சென்னையின் பூர்வகுடிகள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதையும், அவர்களின் வாழ்வை சூழ்ந்து இருக்கும் வறுமையும், விரிந்து நிற்கும் அரசதிகாரத்தின் மறைமுக திரையும் விவரித்துக்கொண்டே நகரும் திரைப்படம் , உழைக்கும் மக்களின் குழந்தைகளின் வாழ்வை பதிவு செய்கிறது.
உலகமயமாக்கல் கொண்டுவந்த மேற்குலக வணிக உணவு பூதம் இக்குழந்தைகளின் எளிய கனவு நிறைந்த வாழ்க்கையினை எப்படி ஆட்கொள்கிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். காக்காமுட்டையை உண்ணுவது மூலமாக தனது பேரக்குழந்தைகளுக்கு போதிய ஆற்றலுணவு கிடைக்கும் என பாட்டி நம்புகிறார். இதை கண்டிக்கும் தனது மருமகளிடம், ‘தினம் கோழி முட்டை வாங்கித் தரமுடியுமா நம்மளால?’ என்று எழுப்பும் கேள்வி பல உண்மைகள் முகத்தில் அறைகிறது.
வழக்கமான கமர்ஷியல் அம்சங்கள் தவிர்த்து எடுக்கப்படும் படங்கள் ரசிகர்களை ஈர்க்காது, லாபம் ஈட்ட அந்தப் படங்களால் இயலாது என்ற கருத்தை காக்கா முட்டை உடைத்துள்ளது. சாதாரண பார்வையாளர்களால் காக்கா முட்டை திரையரங்குகள் நிரம்பியுள்ளன.
இரண்டு தினங்களில் இப்படம் இந்தியாவில் 2.4 கோடிகளை வசூலித்துள்ளது. எந்த முன்னணி நடிகரும் இல்லாத, முக்கியமாக கமர்ஷியல் அம்சங்கள் ஏதுமற்ற காக்கா முட்டை இவ்வளவு வசூலை பெற்றது அற்புதமான கொண்டாடப்பட வேண்டிய விஷயம்.
அவசியம் திரையரங்கில் இப்படத்தினை பாருங்கள். வெற்றிப்படமாக மாற்றிக்கொடுப்பதனால், ‘காக்கா முட்டை,’ ‘குற்றம் கடிதல்’ போன்ற அரோக்கியமான திரைப்படங்களை நம் திரையரங்குகளில் நிறைக்கலாம்… இல்லையெனில், எந்திரன்-கத்தி போன்ற குப்பைகளில் காலம் தள்ளவேண்டிய கொடுமை நிகழும்.
ஆரோக்கியமான முயற்சிகளை வரவேற்போம். வாழ்த்துவோம். இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோருக்கும், குறிப்பாக இப்படத்தை தூக்கி சுமந்து தமது இயற்கையான நடிப்பினால் நமது மனதை நெகிழவைக்கும் குழந்தை நடிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
ஒரு அரிய படமொன்று உருவாகக் காரணர்களாக இருந்திருக்கும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோருக்கு நன்றி. இயக்குனர்,ஒளிப்பதிவாளர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்திய சினிமாவின் வைர முட்டை!

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை