போதையில் மிதந்த மேதையின் உள்ளத்தில் உதித்த பாடல்கள் ஒரு பார்வை...


இன்றும் எம் உதடுகள் முணுமுணுக்கும் போதையில் மிதந்த மேதையின் உள்ளத்தில் உதித்த பாடல்கள் ஒரு பார்வை...


பூஜ்ஜியத்துக்குள் கவி ராஜ்யத்தை ஆண்டு இணையற்ற கவிஞர் என்ற தனித்துவ கொடியை ஏந்தி காலத்தால் அழியாத தத்துவ ஞானியாக வாழ்ந்து நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் கவிஞர் கோ. கண்ணதாசனுக்கு நிகராக இனித்தான் எவரும் பிறக்க வேண்டும் என்பது அவர் பால் ஈர்க்கப்பட்டோரின் முடிவாகும்.
1949ல் ‘கன்னியின் காதலி’ என்ற படத்துக்குத் தனது கன்னிப் பாடலை எழுதியதன் மூலம் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமானார். நவரசங்களையும் அதற்கு அப்பாலும் தொட்டுபாடல் எழுதி தனது காவியங்களால் மானிட உள்ளங்களில் மதிப்போடு கட்டுண்டார்.
கவிஞரது முதல் மனைவி பொன்னழகி அம்மையாரின் இயல்புகளை சிந்தித்துக் கொண்டிருந்த கண்ணதாசனின் உள்ளத்தில் உதித்த எண்ணத்தின் அடிகள் தான்.
உண்ணும் அழகைப்
பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே
விழித்திருப்பாயே
கண்ணை இமை போல்
காத்திருப்பாயே
காதல் கொடியே கண் துயில்வாயே
என்ற அடிகள் இவை. பாலும் பழமும் படத்தில் அமரர் சிவாஜிகணேசனின் நடிப்பாற்றலால் பெருமைபெற்று இன்றும் இதழ்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றன.
இதேபோல் ஒரு சமயம் இவர் பகவத் கீதைபடித்ததுக் கொண்டிருந்த போது இதயத்தைக் கவர்ந்த ஒரு தத்துவம், காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் ஆனது.
இன்னுமொரு சமயம் எழும்பூர் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த வேளை கண்ட காட்சி ‘சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ ஆனது. பாவமன்னிப்பு படத்தில் ஒருகாட்சி, கதாநாயகன் அனாதையாகி அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் மனம் குலைந்த நிலை இதற்கு ஏற்றாற் போல் பாடல் ஒன்றினை எழுத வேண்டும் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கவிஞரின் கம்பெனிக்கு கடன் வசூலிக்க ஆள் வந்திருக்கிறார் என்ற செய்தி அது கவிஞரோ இருதலைக் கொள்ளி எறும்பானார். உடனே எழுதுகோல் காகிதத்தில் தள்ளாடியது.
சிறிது நேரத்தில் சிந்தனை வரிகள் அங்கே கொட்டிக்கிடந்தன. ‘சிலர் சிரிப்பார் சிலர் அழுவார். நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ எத்தனை அருமையான தத்துவம்.
கவிஞர் கண்ணதாசன் சாதாரணமாக இருப்பதை விடவும் போதையில் இருக்கும் நேரம்தான் அதிகம். அந்தமேதை இவ்வளவு விரைவில் எம்மிடம் விடைபெறவும் இதுவே காரணமாகியது.
இந்திய சுதந்திர வெள்ளி விழா தொடர்பான கவிரயரங்கம் கவிஞரின் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை அரங்கிலே பாடிய ஒரு கவிஞர் ‘தலைமையில் வீற்றிருக்கும் கவிஞர் குடிப்பதை இனி நிறுத்த வேண்டும்’ என்ற தோரணையில் வார்த்தைகளையும் சேர்த்துப் பாடினார். அதற்கு கவிதையிலேயே பதிலளித்த கவிஞர் கண்ணதாசன்,
நாளை முதல்
குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
ராத்திரிக்கு தூங்க வேணும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்’ என்றார்.
இதுவே ஒரு படத்தின் பாடலாகவும் பிற்காலத்தில் ஒலித்தது.
ஒரு சமயம் அறிஞர் அண்ணா தனது கழக நண்பரிடம் எங்கிருந்து வருகிaர்கள் என்று கேட்டார் அப்போது அவர் நான் கருவூரிலிருந்து வருகிறேன் என்றார். அதைக் கேட்ட அண்ணா எல்லோருமே கருவூரிலிருந்து சாவூருக்குப் போகிறவர்கள்தான் என்றார். அருகிலிருந்த கண்ணதாசன் இந்த வார்த்தைகளை மிகவும் ரசித்தார். இந்த ரசனையின் பிரதிபலிப்பான எழுந்தது காட்டு ரோஜா மூலம் உள்ளங்களைத் தொட்ட எந்த ஊர் என்றவனே என்ற பாடல்.
இப் பாடலிலே கருவூர் உடலூர், உறவூர், காளையூர், கன்னியூர், வேலூர், விழியூர், கையூர், காலூர், மேட்டூர், பள்ளத்தூர் என்று 18 ஊர்களைப் பற்றிப் பாடி மனித வாழ்க்கையின் தத்துவத்தை அப்பாடல் மூலம் ஊரவிட்டுள்ளார்.
கவிஞர் கண்ணதாசம் பற்றி அவரது புலமை பற்றி அவரது தத்துவம் பற்றி சொல்வதென்றால் விடிய விடிய யுகம்யுகமாக பேசலாம். அத்தனை பெருமை வாய்ந்தது. அவரது கவித்துவம்.அவர் வசன கர்த்தாவாக, கதாசிரியராக, படத் தயாரிப்பாளராக, நடிகராக சினிமா உலகிலே பல பரிமாணங்களில் சஞ்சரித்த போதிலும் பாடலாசிரியர் என்ற பாத்திரம் தான் மக்கள் உள்ளங்களில் அவரை நிரந்தரமாக்கியது
கன்னியின் காதலி படத்தில் ‘கலங்காதிரு மனமே’ என்று தொடங்கிய அவரது சினிமா வரிகள் மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலைமானே’ என்ற வரிகளோடு அமரத்துவம் பெற்றன. அதற்கிடையில் எத்தனை தத்துவங்களை எத்தனை ரசனைகளைப் பிழிந்துமானிடக் குருதியில் கலக்கச் செய்துள்ளார் என்பதை சிந்திக்கவே காலம் போதாது.
அவர் இயற்றிய பாடல்களில் மிகவும் குறுகிய நேரத்தில் அதாவது பத்தேபத்து நிமிடங்களுக்குள் எழுதி முடித்த பாடல் ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பாடலாகும்.
நீண்ட காலம் அதாவது பல நாள் சிந்தனையை செலவிட வேண்டி ஏற்பட்ட பாடல் ‘நெஞ்சம் மறக்கவில்லை அது நினைவை இழக்கவில்லை’ என்ற பாடலாம்.
கவிஞர் பாடல் வரிகளைக் கூறும் போது வேட்டியின் ஒரு நுனியைக் கையில் ஏந்தியவாறு அறைக்குள் நடந்த வண்ணமே சொல்லுவாராம். பாடல் வரிகளைக் கூறும் போது அவர் செருப்பு அணிய மாட்டாராம். மதம், தத்துவம், காதல், காமம், அரசியல், சோதிடம் போன்ற துறைகளில் பெருமளவு நூல்களை எழுதியுள்ள இவரிடம், ஒருமுறை நீங்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? என்று கேட்கப்பட்ட போது அவர் ‘நூலைப் பின்பற்றுங்கள் ஆனால் நூலாசிரியரைப் பின் பற்றாதீர்கள்’ என்று பதில் சொன்னாராம்.
தென் இந்தியாவின் சிறுகூடல்பட்டி ஊரிலே பிறந்த இவர் அமெரிக்க நாட்டின் சிக்காக்கோ நகருக்கு வைத்திய சிகிச்சை பெறச் சென்றிருந்த போது அங்கு வைத்தே உயிர் நீத்தார்.
அவர் சிகிச்சைபெறச் சென்றிருந்த சமயத்தில் அங்கு வாழும் இந்தியக் குழந்தைகளைச் சந்தித்த போது அவருக்கு பெரும் ஆதங்கம் ஏற்பட்டதாம். அதற்குக் காரணம் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழியில் பேசாமையாம் இதைக் கண்டு வேதனையில் எழுதிய கவிதை வரிகளே அவரது வாழ்க்கையில் எழுதிய இறுதி நான்கு வரிகள்.
மனதனில் ஒன்றுபட்டு சேர்ந்திடுவீர் - இங்கு
மழலைகள் தமிழ் பேசச் செய்திடுவீர்
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டு விட்டால் வாழ்க்கையில்லை
என்பது தான் அந்த வரிகள் தமிழ் மீது கவிஞர் கொண்டிருந்த பற்றுக்கு இதுவும் ஒரு சான்று.
தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான தத்துவங்களைப் பொதித்த - வாழ்க்கையின் வளைவுகளை நெளிவுகளை கழிவுகளை வார்த்தைகளில் வடித்த காலத்தால் அழியாக கவிஞரை இனி என்று காண்போம்.

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை