பூமி ஒரு ஆச்சரியம்...

பூமியை சுற்றி நாடுகள் உள்ளது எனில் பூமியின் ஒரு புறம் இருந்து மறு புறம் வரை துளையிடும் போது மற்ற நாடுக்கு தானே செல்ல வேண்டும்?

முதலில் இது சாத்தியமில்லை. இது வரை பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர்-டீப்பின் ஆழம் 12.26 கிலோமீட்டர்கள் அதாவது பூமியின் விட்டத்தில் 0.2%. இதற்கே 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. பூமியின் வெப்பம் தாளாமல் அந்த துளையிடும் பணி நிறுத்தப்பட்டது.

ஒரு பேச்சுக்கு, பூமியில் நேராக துளை ஒன்று இட வேண்டுமென்றால்

  • 8,000 மைல்களுக்கு மேல் பாறை மற்றும் உருகிய தீக்குழம்பு
  • 6,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
  • பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதிக அழுத்தம்

இவை அனைத்தையும் சமாளிக்க வேண்டும். எப்படியோ இவற்றை சமாளித்து நேரான துளை இடப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அதில் குதித்தால் என்ன ஆகும்?

வேறென்ன? நாம் சிந்தித்துப் பார்க்க விருப்பம் இல்லாத விதங்களில் கொடூரமான இறப்பு ஏற்படும். சரி அதையும் சமாளிக்க முன்கூட்டியே வழி செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.

பூமியின் மேற்பரப்பு ஒரு மணி நேரத்திற்கு 1,000 மைல்களுக்கு மேல் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழமாகச் சென்றாலும், அது இன்னும் சுற்றிக் கொண்டு தான் இருக்கும். ருலேட் மேசையின் மேல் உள்ள பந்து சுழல்கிறது அல்லவா, அதைப்போல குதித்த ஒரு மைல் தூரத்திலேயே துளையின் சுவற்றில் இடி பட்டுக்கொண்டே இருப்பீர்கள். இதற்கு பெயர் கோரியோலிஸ் விளைவு. சூராவளிகள் வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ காணப்படுவதற்கும் இது தான் காரணம்.

பூமியின் துருவங்களுக்கு கோரியோலிஸ் விளைவு பொருந்தாது என்பதால், துருவங்கள் வழியாக மட்டும் துளையை இட்டால் எங்கும் இடிக்காமல் உங்களால் விழ முடியும். அதாவது உயர்ந்த கட்டடத்தின் மேலிருந்து விழுவதைப் போல. ஒரே ஒரு வித்தியாசம். வினாடிக்கு 6 மைல் வேகத்தில் விழுவீர்கள். அதாவது ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட 2800% அதிக வேகம்.

ஆனால், பூமியின் மையத்தை நெருங்கும்போது, ​​எல்லா திசைகளிலும் ஈர்ப்பு விசையால் சமமாக இழுக்கப்படுவீர்கள். அதாவது ஈர்ப்பு விசை இருப்பதை உணர மாட்டீர்கள். உடல் எடையை சுத்தமாக உணர மாட்டீர்கள்.

42 நிமிடங்கள் 12 நொடிகள் கழித்து நீங்கள் பூமியில் இட்ட துளையின் மறுபுறம் அடைவீர்கள். ஆனால், புவியீர்ப்பின் காரணமாக திரும்பவும் அதே துளையின் வழியாக விழுவீர்கள். தொடங்கிய இடத்துக்கே திரும்பவும் வருவீர்கள். ஆனால் துளையை விட்டு சிறிதும் நகர முடியாமல் துளையின் வழியாக திரும்பவும் விழுந்து விடுவீர்கள்.

அதாவது, அந்த துளையில் ஒரு முறை குதித்தால் அதை விட்டு வெளியே வரவே முடியாது.

பட உதவி : Victoria Museum, Nikita Kirsano, Google images

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை