திருமணத்தின் வரலாறு

    திருமணம் என்பது குறைந்த பட்சம் 4,350 ஆண்டுகள் பழமையானது என்று நமக்கு கிடைக்கப்பெற்ற சான்றுகள் கூறுகின்றன. ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்யும் வழக்கம் தோன்றியிருக்கலாம் என்று பெரும்பாலான மானுடவியலாளர்கள் நம்புகிறார்கள்.

அவ்வாறு நடந்த திருமணங்களின் முதன்மை நோக்கங்கள் - ஒரு ஆணை குறைந்த பட்சம் ஒரு பெண்ணுடனாவது பிணைப்பதும், இந்த பந்தத்தில் பிறக்கும் குழந்தைகள் உண்மையிலேயே அந்த ஆணுடைய உயிரியல் வாரிசுகள் தான் என்பதை உறுதிப்படுத்துவதும். காதலோ, தனக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்பதோ இவற்றின் நோக்கமாக இல்லை.

"சந்ததிகளை உருவாக்க என் மகளை இன்ன விலைக்கு தாரை வார்த்து கொடுக்கிறேன்" என்று தந்தை சட்டப்படி மணமகனோடு ஒப்பந்தம் செய்வார். மணப்பெண்ணின் விலையை மாப்பிள்ளை, பெண்ணின் தந்தைக்கு தருவது சில நாகரீகங்களிலும், மோதிரமாக செய்து மணப்பெண்ணின் விரலில் அணிவிப்பது சில நாகரீகங்களிலும் வழக்கமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறினால் பெண்ணின் தந்தைக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு திருமணம் செய்த தன் மனைவியை, பெற்ற பிள்ளைகளை மற்றவர்களுக்கு விற்கவும் கூட கிரேக்கர்களின் அக்கால சட்டத்தில் இடம் இருந்தது‌.

மெசொப்பொத்தேமியாவின் மணப்பெண் சந்தையை கீழே உள்ள படத்தில் காணலாம்.


சிந்து சமவெளி நாகரிகத்தில் பெண்கள் மதிப்பும் மரியாதையுடனும் நடத்தப் பட்டனர். தனக்கு உரிய மணமகனை மணப்பெண்ணே தேர்வு செய்யலாம். மணமகளின் வீட்டிற்கோ அவரது வீட்டிற்கு பக்கத்திலோ தான் மணமக்கள் குடியேறுவர். சில குலங்களில் கணவன் மனைவி இருவரும் திருமணத்திற்கு பிறகும் தத்தம் வீட்டிலேயே வசிப்பர். கலவி கொள்வதற்கு மட்டும் சந்திப்பர். கணவருக்கு தன் குழந்தைகள் மேல் இருந்ததை விட தன் சகோதரிகளின் குழந்தைகள் மீதே உரிமையும் கடமையும் அதிகம். அந்நியர் படையெடுப்பின் காரணமாக இவை அனைத்தும் தலைகீழாக மாறியது இன்னொரு கதை.

சரி, திருமணம் உருவான கதை இதோ. காடுகளில் வாழ்ந்த மனிதர்கள் சுமார் 30 பேர் கொண்ட குழுக்கள் (குடும்பங்கள்) அமைத்து வாழ்ந்தனர். இந்த குழுவில் பல ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர். ஒரு குழுவில் இருந்த ஆண்களும், பெண்களும் தத்தம் குழுவிற்கு உபயோகமாக இருத்தல் அவசியமாக இருந்தது. காடுகள் செழித்திருந்த வரை பழங்கள் காய்கறிகள் சேகரிப்பதில் பெண்களும் ஆண்களும் சரிசமமாக ஈடுபட்டனர். இனப்பெருக்கத்திலும் குழந்தை பராமரிப்பிலும் பெண்களின் பங்கு அதிகமாக இருந்ததால் ஆண்கள் ஆபத்து மிகுந்த வேலைகளில் (உதாரணமாக வேட்டையாடுல்) ஈடுபட்டனர்.

காடுகள் அழியத் தொடங்கி மனிதர்கள் விவசாயத்தில் இறங்கிய போது, பெரும்பாலான ஆபத்து மிகுந்த மற்றும் அதிக உடல் உழைப்பு தேவைப்பட்ட வேலைகளில் ஆண்கள் ஈடுபட்டனர். அதுவரை இல்லாத சொத்து (அ) உடைமை என்னும் சித்தாந்தம் உருவானது. வயல்களும், நிலங்களும் ஆண்களின் உடைமை என்றாயின. நாளடைவில் தன் வாழ்நாள் முழுவதும் கலவி கொள்ள குறைந்த பட்சம் ஒரு பெண்ணும், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளும் ஆண்களின் உடைமை என்று ஆயினர். தனது உடைமைகள் தனக்கு மட்டுமே உடைமைகள் என்ற உறுதிப்பாடு ஆண்களுக்கு தேவைப்பட்டது. அதை உறுதி படுத்த உதித்த உடன்படிக்கை தான் திருமணம்.

Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை